அஞ்சுவீடு

அமைவிடம் - அஞ்சுவீடு
ஊர் - அஞ்சுவீடு
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கொடைக்கானலில் இருந்து சுமார் 28 கி,மீ. தொலைவில் உள்ளது அஞ்சு வீடு நீர்வீழ்ச்சி. இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். அஞ்சு வேடு என்ற கிராமத்தின் பெயரால் நீர்வீழ்ச்சியின் பெயர் அமைந்துள்ளது. மேலும் இது மேல் பாலார் நீர்வீழ்ச்சி அல்லது யானை பள்ளத்தாக்கு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. அஞ்சு வீடு கிராமத்தில் இருந்து ஆற்றோரமாக சுமார் ஒரு கி.மீ நடந்தால் அருகில் உள்ள மலைக் குன்று ஒன்றில் சுமார் இருபது கற்திட்டைகள் காணப்படுகின்றது. அவற்றில் பல சிதிலமடைந்து உள்ளன. இங்குள்ள கற்திட்டைகள், தனியாகவோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன. அது போல கற்திட்டைகளின் அளவுகளும் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. இங்குள்ள கற்திட்டைகள் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் உருவாக்கப்பட்டது போல காணப்படுகிறது. சில இடங்களில் கற்திட்டைகள் கல்வட்டத்துடன் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கற்திட்டைகள் பெரும்பாலும் இயற்கையாக கிடைத்த பலகைக் கற்களைக் கொண்டு மூன்று அல்லது நான்கு புறமும் நிறுத்தி சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மீது பலகைக்கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. இங்குள்ள பலகைக்கற்களில் இடுதுளை என்ற துவாரம் காணப்படவில்லை. இங்குள்ள மலைக் குன்றின் உச்சிப்பகுதியில் பரவலாக கற்திட்டைகள் அருகருகே காணப்படுவது சிறப்பாகும். நோரா மிட்செல் (Nora Mitchell, British botanist ) அவர்களின் கருத்துப்படி, பழனி மலைத் தொடரில் காணப்படும் கற்திட்டைகள் இம்மலையில் முதலில் குடியேறிய மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். அங்கு கிடைக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில் இவை சுமார் கி.மு. 1500 – கி.மு. 2000 காலகட்டத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இவரது “The Indian Hill-Station: Kodaikanal“ (1972), என்ற புத்தகத்தில் இம்மலையில் உள்ள பல்வேறு கற்திட்டைகள் குறித்து விவரித்துள்ளார். இங்குள்ள கற்திட்டைகள் யாரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து அறுதியிட்டு கூற இயலாது. பிரித்தானிய ஆய்வாளர் தர்ஸ்டன் , கூற்றின் படி ” குரும்பர் பழங்குடி மக்களின் மூதாதையர்கள் இக்கற்திட்டைகளை உருவாக்கியிருக்கலாம். இன்றளவும் இம்மக்கள் இறந்த முன்னோர்களுக்கும், கோவிலுக்கும் இம்மாதிரியான கட்டுமானத்தைக் கட்டி வருகின்றனர். இன்று பழனி மலைப்பகுதிகளில் குரும்பர் மக்கள் குடியிருப்பு இல்லையென்றாலும் , ஒரு வேளை தற்போது இங்கு வசிக்கும் பளியர்கள் அல்லது பிற ஆக்கரமிப்பாளர்களால் குரும்பர் மக்கள் இவ்விடத்தை விட்டு பிற மலைகளுக்கு சென்று இருக்கலாம் என்கிறார். இங்குள்ள கற்திட்டைகளைக் கட்டியவர்கள் பழனி மலைத்தொடரில் குடியேறிய ஆதிக்குடிகளாவார்கள் என சான்றுகள் நன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பேரா. கா. ராஜன் தலைமையில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகளின் படி இக்கற்திட்டைகள் கி.மு. 1500 – கி.மு.2000 காலகட்டத்தைச் சேர்ந்தவையாக்க் கருதப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

பழனி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள அஞ்சுவீடு என்னும் கிராமத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் காணப்படுகின்றன. அவை பெருங்கற்காலத்திய ஈமச்சின்னங்களில் காலத்தால் முந்தியதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஐவகைத் திணைகளில் குறிஞ்சித் திணை மலையும் மலைசார்ந்த இடமாகும். மலைப்பகுதிகளில் பெருங்கற்களைக் கொண்டு அமைக்கப்படும் இவ்வகையான கற்திட்டைகளே காலத்தால் முற்பட்டதாகும். இதன் தொடர்ச்சியே நிலப்பகுதிகளான முல்லை, மருதம் மற்றும் பிற திணைகளில் கற்களால் அமைக்கப்படும் ஈமச்சின்னங்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. அவ்வகையில் அஞ்சுவீடு கிராமத்தில் அமைந்துள்ள கற்திட்டைகள் பழமையானவை.